பரம்பரை தர்மகர்த்தாக்கள்

அருள்மிகு புதுவாங்கலம்மன், வெள்ளாளக் கவுண்டர் இனத்தைச் சார்ந்த பெருங்குடி குலத்தவரின் குல தெய்வம் ஆகும். சுமார் 150 வருடங்களுக்கு முன்பு பெருங்குடி குலத்தவர் அருள்மிகு வாங்கலம்மன் (பழைய வாங்கலம்மன்) கோயிலில்தான் வழிபாடு நடத்தி வந்தனர். அங்கு மற்ற சமூகத்தினரும் வழிபட்டு வந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இடையில், அந்தக்கால கட்டத்தலிருந்த பூசாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டினால் பெருங்குடி குலத்தவர் மட்டுமே வழிபடுவதற்கு புதியதாக ஒரு வாங்கலம்மன் கோயில் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மறைந்த வக்கீல் திரு.சுப்புராயக்கவுண்டர் அவர்களின் முன்னோரான திரு. பழனியாண்டிக் கவுண்டர் அவர்கள் 1885-ஆம் ஆண்டு புதுவாங்கலம்மன் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவர் கோயில் கட்டுவதற்காக குப்பிச்சிபாளையம் கிராமத்தைச் சார்ந்த பழைய இட எண் 344 (புது இட எண் 314)-ல் இடம் வேண்டிவருவாய்த்துறைக்கு விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பத்தைப் பரிசீலித்த வருவாய் துறை தாசில்தார், பழைய எண் 344 (புது இட எண் 314)லும், பழைய எண் 345 (புது இட எண் 315)லும் 60 சென்ட்கள் நிலத்தை கோயிலுக்காக அளித்தார். கோயில் கட்ட அனுமதி கிடைத்தும் திரு.பழனியாண்டிக் கவுண்டர் அவர்கள் புது வாங்கலம்மன் கோயிலைக் கட்டும் பணியினைத் துவங்கினார் பெருங்குடி குலத்தைச் சார்ந்த வெள்ளாளக்கவுண்டர் இனத்தவர்கள் அளித்த நன்கொடையினால் கோயில் கட்டும் பணி 1888-ல் இனிதே நிறைவுற்றது.

கோயிலைக் கட்டி முடித்த பிறகு அதன் நிர்வாகப் பணிகளை திரு.பழனியாண்டி கவுண்டர் அவர்கள் அதன் நிறுவனர் பொறுப்பில் இருந்து தன் இறுதிக் காலம் வரை நிர்வகித்து வந்தார். அவர் 1890 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். திரு. பழனியாண்டி கவுண்டருக்கு வாரிசுகள் இல்லாததால் தன் மூன்று சகோதரர்களில் மூத்தவரான திரு. வேலாயுதக் கவுண்டர் அவர்களை கோயில் நிர்வாகப் பணிகளை தனக்குப் பிறகு கவனிக்குமாறு வேண்டியிருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்ற திரு. வேலாயுதக்கவுண்டரும் தன் ஆயுட்காலம் வரை கோயிலை நிர்வகித்து வந்தார். குடும்பத்தில் பாகப் பிரிவினை ஏற்பட்ட பொழுது, வாங்கலில் தன் பங்குக்கு கிடைத்த 0.42 சென்ட் ஈர நிலத்தை (இட எண் 599) கோயிலுக்கு தானம் செய்தார். நிறுவனரின் விருப்பத்திற்கிணங்க தன் இறுதி்க் காலமாகிய 1910-ஆம் ஆண்டு வரை திரு.வேலாயுதக் கவுண்டர் அவர்கள் கோயிலை நிர்வகித்து வந்தார். அவருக்குப் பிறகு அவரின் வாரிசாகிய திரு. சுப்பராயக் கவுண்டர் அவர்கள் பரம்பரை தர்மக்கர்த்தா பொறுப்பினை ஏற்றார்.

1922-ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு திரு. காளியண்ணக் கவுண்டர் அவர்கள் அப்பொறுப்பை ஏற்றார். அவருடைய நிர்வாக காலத்தில் தன் பெயரில் கோயிலுக்கு மின் இணைப்பைப் பெற்றார். 1976-ஆம் ஆண்டு அவர் இறைவனடி சேர்ந்ததும் கோயில் தர்மக்கர்த்தா பொறுப்பினை அவருடைய மூத்த குமாரராகிய வக்கில் திரு.சுப்பராயக் கவுண்டர் அவர்கள் ஏற்று செவ்வனே நடத்தி வந்தார். கோயிலை புனரமைக்கும் தேவையை அவர் உணர்ந்ததால், அதற்கான ஏற்பாடுகளைத் துவக்கினார், குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த 18 கிராம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வரி வசூல் செய்து, 1979-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவினை மிகப் பெரிய அளவில் நடத்தனார். தனி ஒரு குலத்தைச் சார்ந்த கோயிலில் கும்பாபிஷேகம் என்பது அந்தக் கால கட்டத்தில் யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு நிகழ்வாகும், அதை முதலில் சாதித்துக் காட்டி நம் பெருங்குடி குலத்தக்கே பெருமையைக் சேர்த்தவர் வக்கீல் திரு.சுப்பராய கவுண்டர் என்றால் அது மிகையாகாது. அதற்குப் பிறகே மற்ற குலத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயற்கரிய செயலை செய்வதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் இன்றைய திருப்பணிக் குழுத்தலைவராகிய வக்கீல் திரு.ரவீஸ்வர மூர்த்தி அவர்கள் ஆவார்.

கோயில் கட்டி முடித்தும் மற்றொரு மின் இணைப்பு திரு. சுப்பராயக்கவுண்டர் அவர்களால் பெறப்பட்டது.தினசரி பூசைக்குண்டான செலவுகளை கோயிலுக்கென அவர் முன்னோர்கள் அளித்த 0.42 சென்ட் நிலத்திருந்து வரும் வருமானத்திலும் தன் சொந்தப் பணத்திலிருந்தும் செய்து வந்தார். இவ்வாறாக மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக இந்தக் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பரம்பரை தர்மகர்த்தா பொறுப்பு, திரு. சுப்பராயக் கவுண்டர் அவர்கள் 1999-ஆம் ஆண்டு சிவனடி சேர்ந்ததும் அவரது குமாரராகிய மருத்துவர் திரு. எஸ். சிவக்குமார் அவர்களிடம் வந்தது. அவர் மருத்துவப்பணி நிமித்தமாக திருச்சியில் வசித்து வருவதாலும் கிராமத்திற்கு அடிக்கடி வந்து கோயில் பணிகளில் ஈடுபட முடியாததாதலும் திரு. இரவீஸ்வர மூர்த்தியின் விருப்பத்திற்கிணங்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். திரு. இரவீஸ்வர மூர்த்தி அவர்களும் கோயில் காரியங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு 2003-ஆம் ஆண்டு கோயிலை மறு வடிவமைத்து கும்பாபிஷேகம் செய்யும் வேலைகளைத் திருப்பணிக்குழு அமைக்கத் துவங்கினர்.
ஆனால் 2006-ஆம் ஆண்டு திரு. இரவீஸ்வர மூர்த்தி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவர் திரு. சிவக்குமார் அவர்களே மீண்டும் தர்மகர்த்தா பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

தர்மகர்த்தாக்களின் பரம்பரை வரைவு

திரு. காளியண்ணக் கவுண்டர்
மறைவு 1855 – ம் ஆண்டு

திரு. பழனியாண்டிக் கவுண்டர்

கோயில் நிறுவனர்
(வாரிசு இல்லை மறைவு 1890-ம் ஆண்டு)

திரு. வேலாயுதக்கவுண்டர்
(மறைவு 1910-ம் ஆண்டு)
திரு. சுப்பராயக் கவுண்டர்
(மறைவு 1922-ம் ஆண்டு)

திரு. சு. காளியண்ணக் கவுண்டர்
(மறைவு 1976-ம் ஆண்டு)

வக்கீல். திரு. சுப்பராயக் கவுண்டர்
(மறைவு 1999-ம் ஆண்டு)

மரு. திரு. சிவக்குமார்
வக்கீல் திரு. இரவீஸ்வர மூர்த்தி
மரு. திரு. சிவக்குமார்