Sri Vangalamman Suprabhadham

கருக்கல் வெளுத்தம்மா கருவேலம் பூத்தம்மா
காராம் பசுவிடத்தில் பால்முல்லை உண்ணும்மா
தெருக்கல் எங்கெங்கும் தெய்வீக கோலம்மா
திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

சேவல் கூவுதம்மா! தேசமெல்லாம் விழித்தம்மா !
செங்கல்மடநாரை குயிலினங்கள் கூவுதம்மாவுதம்மா!
ஆவல் குறையாமல் அலை போல கூட்டமம்மா!
திருக்கண் மலர்வாயோ தேவியோ வாங்கலம்மா!

திசைகள் எங்கேயும் தேவதைகள் கூடிவர
தெய்வீ்கமறை பேசி அந்தணர்கள் சூழந்துவர
பசிய முளைப்பாரி உன் பாளையத்தை தேடி வர
பாராளும் ஜெயசக்தி திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

ஆனை பரிசேனை அம்பாரி உன்வாசல்
சீராம் சீர்வரிசை சேருதம்மா உன் பாதம்
தேனார் சொல்லழகி தாயாரே வாங்கலம்மா!
திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

எம்குல குடிபாட்டு மக்களெல்லாம் வந்துவிட்டார்.
எட்டுபாட்டி புகழ் மணக்கும் நம்பியாண்டவர் உடனே
பொன்மலை பல கடந்து மலையாள கருப்பண்ணரும்
மதுரைவீரர் வந்தாரே! திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

காவேரி தீர்த்தம்மா! கரகம் பல கோடி
கருவறை வந்தம்மா! கோவில் படியேறி
நீராட வாங்கலம்மா! நிறைமதி அது சூடி
திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

சதுரகிரியீசன் தலை சாய்த்து நின்றதை போல்
சங்கரி வாங்கலம்மா தலை சாய்த்து நின்றாயோ!
மதுக்கரை செல்லாயி! தொட்டியத்து மாகாளி!
இருவர் பிரியதோழி! திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

பால்குடம் நூற்றெட்டு, பன்னீரு திருநீறு,
வாசனை தயிர் குடமோ ஏராளம், இளநீறு,
நால் ஆறு தீர்த்தங்கள் நாவினிக்கும் கனிச்சாறு
நலமாய் சேர்த்திடுவோம். திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

மலையாம்மலை கடந்து மத கரியை போல் நடந்து
மலையாள கருப்பானவன் மச்சமில்லா ஆடுபலி
நிலையாய் கொண்டு இங்கே நித்தியம் அருள் கொடுக்க
திருக்கண் மலர்வாயே! தேவியே வாங்கலம்மா!

பிளிறும் களிறும் பிடுயும் பணியும்
பரிபூரண நாத கிருபா கரியே
துளிர்வேப்பிலை வாச மருத்துவத்தில்
துயரம் களையும் பூத்தேன் மொழியே!

அதிரும் முரசும் நதியில் உரசும் அவை
தந்திடும் மங்கள பேரரவம்.
எதிரும் புதிரும் பணியும் அடியார் – குறை
தீர கொடுத்திடு வேண்டும் வரம்.

அரவின் நிழலில் அமரும் நினையே அகிலம்
முழுதும் அறியும் அறியும்.
தரவும் பெறவும் உதவும் உனையே தாயாய்
பணியும் இம் மண்ணுலகம்.

பத்துவிரல்களில் மோதிரமும் கரும்
பச்சை கரை பூம்பட்டழகும் – நல்
முத்து பதித்த பொன் மேகலையும் – சிறு
மூரல் உதிர்த்திடும் புன்னகையும்.

கண்ட சரம் தலை முண்டசரத்துடன்
கருகுமணிச்சர தோளழகும் – வரி
வண்டு வலம் பெறும் பூங்குவளை மலர்
கொண்டு முடிந்த நின் குழலழகும்.

சங்குகழுத்தினில் ரெட்டை வடம் – அதன்
சந்தியில் சேர்த்த நல் சருகுகளும்
குங்கும பூ மண இதழ் அழகும் – நறுஞ்
குஞ்சித நாசியில் மூக்குத்தியும்.

செக்க சிவந்த உன் நெற்றியிலே
கமழும் திலகம் கமனம் கமனம்
சித்ரவசித்திர நுதல் அழகும் – செம்
மீனாய் பாயும் விழியழகும்

நெற்றியில் சுட்டியும் இருகலையும் – முன்
நேர்வகிடும் மணி இராக்கொடியம் – கருங்
கற்றை குழல்தரும் பின்னழகும்
கருநாகத்சவுரி குஞ்சலமும்

முத்தலை சூல கையழகும் – முன்கை
அணியும் கல் கங்கணமும்
நச்சரவ கொடி வங்கிகளும் – திரு
நாகவள்ளி பொன் காப்பழகும்

ஆடக பொன்மணி சூடகமும் – கால்
பாடக சிலம்பு கிங்கிணியும்
ஆடியில் அடியிடும் பாதங்களும் – பத
சுவடியில் பதியும் சின்னங்களும்

பத்து கரத்துடன் எட்டுகரம் – அதில்
பாங்காய் தரித்த ஆயுதமும்
எட்டு திசை எழ கர்ஜனை செய்
அரியாசன சிம்ம தனுசழகும்.

மஞ்சள் குங்கும முகவழகும் – அதில்
மாணிக்க மகுட திருமுடியும் – நறுங்
திங்களை சூடிய சடையழகும் – அதில்
சாற்றிய சரமாய் மல்லிகையும்

வாங்கல்பதி சூழ்வினைநிலமும் – குளிர்
தென்றல் தறுழ்ந்திடும் சோலைகளும்
வாங்கலம்மன் தாய் வடிவழகும் – கை
வணங்குதலே யாம் பெறும் புண்யம்

வெள்ளி பௌர்ணமி விரதங்களும் புது
வாங்கலம்மா நீ உகந்த தினம்
சொல்லி பணியும் உன் தோத்திரமும் – நிதம்
சுகமாய் வேண்டிய பலனை தரும்

சரணம் சரணம் என பொங்கிடும் - ஸ்ரீ
சக்திகளை கண் பாருமம்மா!
குறையின்றி நலம் நிதம் தந்தருள குருவாய்
வருவாய் தாய் வாங்கலம்மா!

ஸதா வாங்கலாயி பதாம் போது தன்னை
மனம் வைத்து பூஜை புரிவோம் புரிவோம்
எதோ எங்கள் பக்தி அதற்குண்டு சக்தி
அதை கோண்டு தாயி்ன் அருள் தான் விழைவோம்

குடி பாட்டு மக்கள் குணத்தால் மனத்தால்
திருக்கோவில் வாசல் இணைவோம் இணைவோம்
விழி நோக்கு தன்னால் வழிகாட்டு தாயே!
புதுவாங்கலம்மா இருக்கும் வரைக்கும்.

அருள் வாக்கருள்வார் சந்தானநாகர்
எமக்காய் அருள்வார் சந்தானபாக்யம்
தொழில் விருத்தியோடு குடிபாட்டு மக்கள்
குலம் தான் செழிக்கும் குடும்பம் களிக்கும்

திருமாலை சூடும் மணமாலை யோகம்
தவறாது நாளும் கொடுப்பார் கொடுப்பார்
தினம் தோரும் வேண்டி வணங்க வணங்க
பொருள் வந்து சேரும் நிலைக்கும் தழைக்கும்

தலம் வன்னி விருட்சம் வலம்வந்து பேர்க்கு
தடை இன்றி கோடி வந்து சேரும்
நலம் செய்யும் தேவி கரூர் வாங்கலாயி
திருப்பேர் உரைத்தால் அழைக்கும் அதிர்ஷ்டம்

அருள் சக்தி வாழும் திருசன்னி தானம் – அதை
சுற்றி நாளும் ஜலம் சூழ்ந்திருக்கும்
குளிர்ந்தே இருந்து வரங்கள் கொடுக்க
குறிப்பால் அமைத்தோம் கருங்கோயில் தெப்பம்

பெரும் கொங்குவேளர் அரும் பாடுபட்டு
அமைத்தோம் அமைத்தோம் திரு சக்தி பீடம்
நெடுங்காலம் இங்கே கடுங்காளி நீயே
நிறைவாய் இருக்க கிடைக்கும் சுபிட்சம்

திருக்கோவில் மேலே கருங்கல்லில் ஆகும்
திருக்கோவில் மணியும் ஒலிக்கும் ஒலிக்கும்
கொடும் பேய்கள் ஏவல் சுடும் தேகநோய்கள்
அதை கேட்டு ஊரெல்லை அண்டாது ஓடும்

நடந்தன எல்லாம் உனதாசியாகும்
நடப்பன எல்லாம் நலமான தாகும்
இடம் தந்து தன்னில் இடப்பாகம் கொண்ட
மஹா தேவன் தேவி மகிழ்வோடு வாரும்

மனச்சாந்தி தாரும் புகழ் பேறு தாரும்
பதினாறு செல்வம் அனைத்தையும் தாரும்
குணத்தோடு வாழும் குடும்பத்தில் நீயும்
குறிப்பாகவந்து குடியேற வேணும்

ஜகதாத்ரி அம்மா ஜகச் சண்டிஅம்மா
ஜெய தேவி கரூர் வாங்கலம்மா!
இகத்தில் அகதத்தில் அருளாட்சி தந்து
கிருஹத்தில் இருக்க உடன் வாங்கலம்மா!

அறிவும் துணிவும் அழகும் வளமும்
அருள் வாங்கலம்மா அருள்வாய் அருள்வாய்
உனையென்றி வேறார் உறவேதெமக்கு
கரூர் வாங்கலம்மா கடைக்காண் கொடுப்பாய்

எமதம்மை அப்பன் குல தெய்வம் நீயே!
எதிர் நின்று பேசு! ஏகாந்த நீலி!
களிப்பிள்ளை போலுன் திருப்பேர் உரைப்போம்
திருச்செந்தில் வேலன் வணங்கும் திரிசூலி!

நல்லம்மா நீயே! நாடாளும் மாயே!
நலம் நல்கும் உன்னை மறவோம் மறவோம்
ரொல்லாங்குஇன்றி புகழ் சேர்க்கவேண்டும்
மண்ணாளும் தாயே! வரம் நல்குவாயோ!

இன்பத்திலேயும் துன்பத்திலேயும்
எம்பக்கம் நின்று துணை செய்ய வேண்டும்
உண் பக்தன் இராஜா துதிக்கின்ற வேலை
கண் பார்க்க வேண்டும் தவ சுப்பரபாதம்.